மூன்றே பொருட்கள் இருந்தால் போதும்… ஜோரான சட்னி ஐந்தே நிமிடத்தில் தயார்!!!

Author: Hemalatha Ramkumar
15 June 2023, 7:38 pm
Quick Share

என்ன டிபன் செய்வது என்று யோசனை செய்ய வேண்டியது ஒரு புறம் இருந்தாலும், அந்த டிபனுக்கு என்ன சைட் டிஷ் வைப்பது என்று யோசிப்பது கூடுதல் வேலை தான். சிம்பிளாக செய்ய வேண்டும் என்றால், சட்னி அல்லது சாம்பார் தான் செய்ய வேண்டும். ஆனால் சட்னிகளில் பல வெரைட்டி இருக்கிறது. இந்த பதிவில் மூன்றே பொருட்களை கொண்டு எளிய முறையில் தயார் செய்யக்கூடிய சட்னி ரெசிபியை பற்றி பார்க்கலாம்.

ஒரு சிலருக்கு தேங்காய் சட்னி ஒத்துக்கொள்ளாது. தேங்காய் சட்னி சாப்பிட்டால் செரிமான பிரச்சனை வந்துவிடும் என்பதற்காகவே அதனை தவிர்த்து விடுவார்கள். இது போன்றவர்களுக்கு இந்த சட்னி ஒரு நல்ல சாய்ஸ். ஏனென்றால் இந்த சட்னியை நாம் தேங்காய் சேர்க்காமல் செய்யப் போகிறோம். அவசர அவசரமாக ஏதேனும் சைட் டிஷ் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையின் போது இந்த சட்னியை நிச்சயமாக ட்ரை பண்ணி பாருங்கள்.

இப்பொழுது சட்னி செய்வதற்கு முதலில் மூன்று பெரிய வெங்காயத்தை தோலுரித்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் ஆறு வர மிளகாய் சேர்த்து வறுக்கவும். உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாயை கூடுதலாக கூட சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்து நாம் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து அது பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் ஒரு கப் பொட்டுக்கடலை சேர்த்து அடுப்பை அணைக்கவும். பொருட்கள் நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த சட்னிக்கான தாளிப்பு கொடுக்க தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து சட்னியில் ஊற்றவும். இப்பொழுது ருசியான பொட்டுக்கடலை சட்னி தயாராகி விட்டது.

Views: - 247

0

0