காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14,000 கனஅடியாக அதிகரிப்பு..!!
Author: Aarthi Sivakumar29 August 2021, 9:59 am
மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 9,500 கனஅடி, கபினி அணையில் இருந்து 5,100 கனஅடி என மொத்தம் 14,600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இந்த தண்ணீர் நேற்று அதிகாலை தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 7,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மதியம் விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 7,474 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 13,500 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 6,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 650 கனஅடியும் திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 66.06 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 66.65 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 29.80 டிஎம்சியாக உள்ளது.
0
0