அட இந்த ஆஃபர் நல்லாருக்கே: ஒரு வாரம் வேலை செஞ்சா 2 லிட்டர் பெட்ரோல் FREE…பனியன் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!!

14 July 2021, 3:39 pm
Quick Share

திருப்பூர்: ஒரு வாரம் வேலை செய்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற வித்தியாசமான அறிவிப்பை பனியன் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் திருப்பூரில் கடந்த மே மாதம் முதல் பனியன் நிறுவனங்கள் இயங்கவில்லை. அவற்றில் வேலை செய்த வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர்கள் ஊருக்கு சென்றுவிட்டனர். தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளால் பனியன் நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தங்களது ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் முழுமையாக வரவில்லை. இதனால், பனியன் நிறுவனங்கள் சிலவற்றில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் வாவிபாளையம் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன பவர் டேபிள் கான்ட்ராக்டர்கள் வித்தியாசமான விளம்பரம் ஒன்றை கொடுத்தனர்.

அதில், ஓவர்லாக், பேட்லாக் தையல் இயந்திர டைலர்கள் ஒரு வாரம் முழுமையாக வேலை செய்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என எழுதி தொலைபேசி எண்ணையும் இணைத்து விளம்பரமாக மின் கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர். இது குறித்து, கான்ட்ராக்டர்கள் கூறுகையில், பெட்ரோல் விலை உயர்வால் சிரமப்படும் தொழிலாளர்களுக்கு அதனை இலவசமாக கொடுக்கலாம் என முடிவெடுத்தோம். அதன்படி, இந்த விளம்பரத்தை மின் கம்பங்களில் கட்டி வைத்தோம்.

இதனை கண்ட ஏராளமானோர் போன் செய்தனர். இதனால், எங்களுக்கு தேவையான பணியாளர்கள் கிடைத்து விட்டனர். ஆனால் சிலர் வேண்டுமென்றே அழைத்து கிண்டல் செய்தனர். சிலர் மிரட்டல் விடுத்தனர். தொழிலாளர்கள் தேவைக்காக மட்டுமே விளம்பரம் செய்ததோம். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Views: - 297

0

0