வட்டி பணம் செலுத்த முடியாத பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: 60 வயது முதியவர் கைது

21 July 2021, 11:58 pm
Quick Share

நீலகிரி: வட்டிக்கு வாங்கிய 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பித் தர முடியாத இளம்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்த முதியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நீலகிரி மாவட்டம் நாடுகாணியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(60) வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் பாலகிருஷ்ணனிடம் 3 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். நீண்ட காலமாகியும் வட்டியையும் தன்னால் செலுத்த முடியவில்லை அசலையும் கொடுக்க வழியில்லை.இதனால் அப்பெண்ணிடம் பாலகிருஷ்ணன் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எழுதி வாங்கி இருக்கிறார். அந்த இளம்பெண்ணும் வேறு வழியில்லாமல் பாலகிருஷ்ணனுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். இதன் பின்னர் இளம்பெண்ணை பாலகிருஷ்ணன் தன் வீட்டிற்கு அழைத்திருக்கிறார்.

எதற்கு என்று கேட்கவும், எழுதிக் கொடுத்தது நினைவில்லையா? எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு சம்மதம் என்று எழுதிக் கொடுத்திருக்கிறாயே என்று சொல்லவும், என்ன நடவடிக்கையாக இருக்கும் என்ற பதைபதைப்பில் பாலகிருஷ்ணன் வீட்டிற்குச் சென்று இருக்கிறார் அந்த இளம்பெண்.அப்போது கதவை சாத்திக்கொண்டு அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இங்கு நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவேன். அதுமட்டுமில்லாமல் பணத்தையும் உடனே எனக்கு தர வேண்டியது இருக்கும் என்று மிரட்டியிருக்கிறார். வெளியே சொன்னால் பிரச்சனையாகிவிடும். அப்பொழுது பணத்தை உடனே தரவேண்டியது வந்து விடுமே. என்ன பண்ணுவது என்ற அச்சத்தில் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார் அந்த பெண்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாலகிருஷ்ணன், அந்த இளம்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பாலகிருஷ்ணனின் தொல்லையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாலகிருஷ்ணனின் தொல்லையை சொல்லி அழுதிருக்கிறார். இதையடுத்து பாலகிருஷ்ணன் மீது பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மற்றும் கொலை மிரட்டல் விடுத்த வழக்கு என இரண்டையும் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர் போலீசார்.

Views: - 59

1

0