சாலையில் சிதறிக் கிடந்த புத்தம் புதிய ஆதார் அட்டைகள் : ஊழியர்களின் அலட்சியமா..? அதிகாரிகள் விசாரணை..!!

18 November 2020, 1:14 pm
aadhar cards - updatenews360
Quick Share

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே சாலையோரம் ஏராளமான ஆதார் அட்டைகள் சிதறிக் கிடந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தாளமுத்துநகர்- ராஜபாளையம் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே சாலையோரத்தில் ஏராளமான புதிய ஆதார் அட்டைகள் சிதறிக் கிடந்தன. இன்று காலை அந்த பகுதியில் குப்பை அள்ளுவதற்காக சென்ற ஊராட்சி துய்மை பணியாளர்கள், இந்த ஆதார் அட்டைகளை பார்த்துள்ளனர். அவைகளுடன் சில தபால்களும் கிடந்தன.

இதையடுத்து, அவைகளை சேகரித்த தூய்மை பணியாளர்கள் மாப்பிளையூரணி ஊராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். சுமார் 100 புதிய ஆதார் அட்டைகள் எப்படி அங்கு வந்தன என்பது தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி அஞ்சல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆதார் அட்டைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கடந்த அக்டோபர் 20-ம் தேதி தூத்துக்குடி மேலூர் அஞ்சல் அலுவலகத்தில் இருந்து தாளமுத்துநகர் அருகேயுள்ள ஆரோக்கியபுரம் அஞ்சல் அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட தபால் பை ஒன்று கீழே விழுந்து காணாமல் போய்விட்டது. இது தொடர்பாக அஞ்சல் துறை சார்பில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சாலையோரம் கிடந்த ஆதார் அட்டைகள், தபால்கள் காணாமல் போன அந்த தபால் பையில் இருந்தவைகளா என்பது குறித்து தபால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் புதிய ஆதார் அட்டைகள் சிதறி கிடந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.