உங்க ஏரியாவில் ஆவின் பால் தட்டுப்பாடா? அரசு சொல்வதை கேளுங்க!

15 February 2020, 5:40 pm
Aavin milk updatenews360
Quick Share

தமிழகத்தில் தடையின்றி ஆவின் பால் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பால்வளத்துறை தெரிவித்துள்ளது.

ஆவின் பால் லாரிகளை இயக்குவதற்கான ஒப்பந்தம், 2018ம் ஆண்டுடன் முடிவடைந்த பிறகு, புதிய ஒப்பந்தத்தை அரசு நீட்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக, சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அதிகாரிகளுடன் ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால், லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், வெளி மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யும் 300 டேங்கர் லாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த திடீர் வேலைநிறுத்தத்தால், தமிழகம் முழுவதும் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்களின் வேலை நிறுத்தத்தால் ஆவின் பால் விநியோகம் பாதிக்காத வகையில் இருக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பால்வளத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பால் வளத்துறை ஆணையர் வள்ளலார் வெளியிட்ட அறிக்கையில், சென்னை பெருநகர பால் பண்ணைகளுக்கு தேவையானபாலை, பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனியார் பால் டேங்கர்கள் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் தங்கு தடையின்றி பால் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply