சொகுசு காருக்கு வரி செலுத்திய நடிகர் விஜய்: தமிழக அரசு தகவல்

Author: Udhayakumar Raman
16 September 2021, 10:03 pm
Quick Share

சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை நடிகர் விஜய் செலுத்திவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காருக்கான நுழைவு வரியை எதிர்த்து, நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது’ என சில கருத்துகளை தெரிவித்திருந்தார். மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டிருந்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் ஹேமலதா அமர்வு, விமர்சனம் மற்றும் அபராத உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். மேலும் நுழைவு வரி பாக்கியை வசூலிக்க வணிக வரித்துறைக்கு செலான் பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தனர்.இந்நிலையில், சொகுசு காருக்கான நுழைவு வரியை நடிகர் விஜய் செலுத்திவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தரப்பு மீதான விமர்சனங்களை நீக்கக்கோரிய விவகாரத்தில், வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Views: - 85

0

0