சென்னையில் அமித்ஷா மீது பதாகையை வீச முயன்ற நபர் : போலீசார் பிடித்து விசாரணை..!

21 November 2020, 4:25 pm
amit shah - chennai crowd - updatenews360
Quick Share

சென்னை : சென்னை வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது பதாகையை வீச முயன்ற நபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னைக்கு வந்த அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் எல். முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வெளியே பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடக்க, அதனை பார்வையிட்டவாறே ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு புறப்பட்டார்.

செல்லும் வழியில் திடீரென தனது கான்வாயை நிறுத்திய அமித்ஷா, சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று, தொண்டர்களை பார்த்து கையை அசைத்தார். அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் இருந்த ஒரு நபர் திடீரென, தான் கையில் வைத்திருந்த பதாகையை அமித்ஷா மீது வீச முயன்றார். இதை சுதாரித்துக் கொண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, பதாகையை வீச முயற்சி செய்த நபரை அங்கிருந்து அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த துரைராஜ் (60) என்பது தெரியவந்தது. எதற்காக அவர் இந்த செயலை செய்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது.

Views: - 20

0

0