தேக்கம்பட்டி முகாமில் ஆண்டாள் யானை தாக்கப்பட்ட சம்பவம்: யானையை திரும்பக் கேட்கும் அசாம் அரசு..!!
28 February 2021, 9:44 pmகோவை: தேக்கம்பட்டி முகாமில் யானை தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தாக்கப்பட்ட யானையை திரும்ப அனுப்புமாறு அசாம் மாநில வனத்துறை அதிகாரிகள் தமிழக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கடந்த பிப்ரவரி 8ம் தேதி முதல் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான யானைகள் கலந்து கொண்டுள்ளன. இதில், ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை, அதன் பாகன் வினில்குமார் மற்றும் உதவியாளர் சிவபிரசாத் ஆகியோர் குச்சியால் தாக்கும்போது, வலியால் யானை கதறுவதுபோன்ற வீடியோ காட்சி பிப்ரவரி 21ம் தேதி வெளியாகி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து, பாகன் வினில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இருவரையும் வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதிகாரப்பூர்வ தகவலின்படி ஜோய்மாலா என்கிற ஜெயமால்யதா என்ற பெண் யானையின் உரிமையாளருக்கான சான்று அசாம் மாநிலம் தீன்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்த கிரின் மோரன் என்பவருக்கு கடந்த 2008ம் ஆண்டு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யானையை வைத்திருப்பதற்கு உரிய சான்று காலவதியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அசாமில் இருந்து லீஸூக்கு பெறப்பட்ட அந்த யானையை திரும்ப அனுப்புமாறு அசாம் மாநில வனத்துறை அதிகாரிகள் தமிழக வனத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்ப உள்ளதாக அசாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0