கல்குவாரியில் குளிப்பவர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து: ஓர் எச்சரிக்கை பதிவு..!!

19 January 2021, 6:40 pm
kalqwari - updatenews360
Quick Share

கல்குவாரியில் குளிக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் கல்குவாரியில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் கல்குவாரி குளியல் எவ்வளவு ஆபத்து நிறைந்தது என்பதை சொல்கிறது இந்த பதிவு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காந்தளூரில் கல்குவாரி குட்டை ஒன்று உள்ளது. தற்போது போதுமான அளவு மழை பெய்துள்ளதால், கல்குவாரியில் உள்ள குட்டையில் நீர் நிரம்பியுள்ளது. இதனால் பலரும் குல்குவாரியில் நிறைந்துள்ள ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த நண்பர்களான தமீம் அன்சாரி, சபீதா, ஏஞ்சல் ஆகியோர் காந்தளூரில் உள்ள கல்குவாரி குட்டை குளிக்க சென்றுள்ளனர். 3 பேரும் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில், குவாரியின் ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காந்தளூர் காவல்துறையினர் மற்றும் செங்கல்பட்டு தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கல்குவாரிக்கு சென்று குளிப்பதை சிறுவர்கள், மக்கள்,இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், கல்குவாரியில் எங்கு கூர்மையான கற்கள் உள்ளது? எது ஆழமான பகுதி என்பது தெரியாது. இதனால் எதிர்பாராத வகையில் மரணங்கள் நிகழ வாய்ப்புள்ளது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.