கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம்… வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கவும் தயங்க மாட்டோம் : நீதிமன்றம் எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
26 April 2021, 12:48 pm
Chennai High Court - Updatenews360
Quick Share

சென்னை : கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்ஆர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், “கரூர் வேலாயுதபாளையத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் 2 அறைகளில் மட்டுமே வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. 77 வேட்பாளர்களின் முகவர்களையும் அனுமதிக்கப்படும் போது, சமூக இடைவெளி பின்பற்றப்பட முடியாத நிலை ஏற்படும். எனவே, 3 அறைகளில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும். மேலும், மருத்துவக் குழுவை பணியமர்த்த வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மனு கொடுத்தும் எந்த பதிலும் வரவில்லை,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, 2 சுயேட்சை வேட்பாளர்களின் முகவர்களை தவிர மற்றவர்களை உள்ளே அனுமதிக்கப்போவதில்லை என தேர்தல் ஆணையம் பதிலளித்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கொரோனா 2வது அலை பரவ தேர்தல் ஆணையமே காரணம் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விருப்பம்போல அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்த போது வேற்றுக் கிரகத்தில் இருந்தீர்களா?
எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக செய்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

Views: - 494

1

0