கொரோனாவுக்கு தமிழகத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் இத்தனையா..? புள்ளிவிபரங்கள் வெளியீடு

8 July 2021, 4:43 pm
Quick Share

கரூர் : தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரங்களை குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கரூரில் செய்தியாளர்களிடம் குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி பேசியதாவது :- கொரோனா 3ம் அலை ஏற்படும்பொழுது குழந்தைகள் பாதிக்காத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று திருச்சி மாவட்டத்திலும், இன்று கரூர் மாவட்டத்திலும், நாளை நாமக்கல் மாவட்டத்திலும் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறுகிறது.

ஆய்வுக்கூட்டங்களில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உதவிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் இரண்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் 93 பேர். ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகள் 4592 என கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. கரூர் மாவட்டத்தில் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகள் 41 பேர். இருவரையும் இழந்த குழந்தைகள் இருவர் என கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஊரடங்கு காலத்தில் துவங்கப்பட்ட ஆணையம் கடந்த ஐந்து மாதங்களில் 20 மாவட்டங்களில் 180 குழந்தைகள் இல்லங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆணையமும் ஆணையத்தின் உறுப்பினர்களும் தீவிரமாக பணியாற்றியதன் விளைவாக குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதில் கரூர் மாவட்டத்தில் 235 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் சேலம் மாவட்டத்தில் அதிகம் நடைபெறுகிறது. இரண்டாவதாக தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அதிகம் நடைபெறுகிறது.

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனிக்கவனம் செலுத்தி கரூர் மாவட்டத்தை குழந்தை திருமணங்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்குவேன். இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் ஆணையமே அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும். இதற்காக எந்த நேரத்தில் அழைப்பு விடுத்தாலும் உதவி செய்ய தயார் நிலையில் இருக்கிறோம்.

பெரும்பாலும் தற்பொழுது பெண்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, தங்கள் மேற்படிப்பைத் தொடர்வதற்கும் லட்சியம் நிறைவேறுவதற்கு தடையாக, பெற்றோர் அவசர திருமணம் ஏற்பாடு செய்வதாக உதவியை நாடுகின்றனர், எனக் கூறினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர்கள் ராமராஜ் மற்றும் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 197

0

0