தவறான செய்தியை பரப்பி பேனர் வைத்த விவகாரம் : கோவை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை..!

7 September 2020, 7:14 pm
Cbe banner - updatenews360
Quick Share

கோவை : வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதை எதிர்த்து தவறான செய்தியை பரப்பும் விதமாக பேனர் வைத்த குடும்பத்தினர் மீது கோவை மாநகராட்சி சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌, பெருமாள்‌ கோயில்‌ வீதி, ராமானுஜ நகரில்‌ வசித்து வருபவர்‌ இளவரசன்‌. இளவரசனின்‌ மனைவிக்கு முதன்முதலாக கடந்த மாதம் 17-ம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கொடீசியாவில்‌ அனுமதிக்கப்பட்டு, 24-ம் தேதியன்று வீடு திரும்பி உள்ளார்‌. அவர்களின்‌ குடும்ப நபர்களின்‌ ஒத்துழைப்பு இல்லாததால்‌ கொரோனா பரிசோதனைகள்‌ செய்யப்படவில்லை. எனவே அந்த வீடு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு 14 நாட்கள்‌ வெளியில்‌ செல்ல தடை செய்யப்பட்டது.

மேலும்‌ கொரோனா அறிகுறி ஏதேனும்‌ இருப்பின்‌ மருத்துவ அலுவலரையோ அல்லது சுகாதார ஆய்வாளரையோ தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இளவரசனின்‌ மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்தும்‌, தனது தந்தையை யாருக்கும்‌ தெரியாமல்‌ வேடப்பட்டியிலிருந்து கடந்த 18-ம் தேதி அன்று தனது வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார்‌. 5 நாட்களுக்கு பிறகு அவரது தந்தைக்கு உடல்‌ நிலை பாதிக்கப்பட்டதால்‌ 22ம் தேதியன்று ESI மருத்துவமனைக்கு சென்று அனுமதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனின்றி 25ம் தேதி இறந்துள்ளார்‌.

அவர்‌ இறந்ததால்‌ கடந்த 27ம் தேதி மேற்கண்ட பகுதியில்‌ மருத்துவ முகாம்‌ ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும்‌ மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள்‌ கடந்த செப்.,01ம் தேதியன்று வெளிவந்தது. அதில்‌ அவரது மனைவி ரோஜா, மகள்கள்‌ வித்யா, ஸ்ருதி மற்றும்‌ அவரது தயார்‌ வைரம்பாள்‌ ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,‌ மாநகராட்சி அலுவலர்களால்‌ மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. அவர்கள்‌ மருத்துவமனைக்கு செல்ல மறுத்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்‌ கொண்டனர்‌.

Cbe Corporation -Updatenews360

இந்த நிலையில்‌, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து மேற்படியார்‌ கடந்த 4ம் தேதியன்று தனியார்‌ மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற அறிக்கையை பெற்று மாநகராட்சியைக்‌ கண்டித்து பேனர்‌ வைத்துள்ளார்‌. மேற்படியார்‌ ஆரம்ப முதல்‌ மாநகராட்சி பணியாளா்களுக்கும்‌, மருத்துவ பணியாளா்களுக்கும்‌ முழு ஒத்துழைப்பு தராமல்‌, மாநகராட்சிக்கு அவப்பெயர்‌ ஏற்படுத்தும்‌ வகையில்‌ பேனரும்‌ வைத்துள்ளார்‌.

பொதுமக்களுக்கு நோய்‌ பரப்பும்‌ விதமாக செயல்பட்டதாலும்‌, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து மாநகராட்சியின்‌ முன்‌ அனுமதி பெறாமல்‌, வெளியில்‌ நோய்‌ பரப்பும்‌ விதமாக செயல்பட்டதாலும்‌, அவர்‌ மீது இந்திய சட்டத்தின்படி, காவல்‌ நிலையத்தில்‌ புகார்‌ அளிக்கப்பட்டு முதல்‌ தகவல்‌ அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்பதை மாநகராட்சியின்‌ சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

அரசுக்கும்‌, மாநகராட்சிக்கும்‌ அவப்பெயர்‌ ஏற்படுத்திட வேண்டும்‌ என்ற தீய எண்ணத்துடனும்‌, அரசின்‌ கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு எவ்வித ஒத்துழைப்புக்‌ கொடுக்காமலும்‌ செயல்பட்டுள்ளார்‌. அவர்‌ தவறான செய்தியினை பரப்பியது மிகவும்‌ கண்டனத்துக்குரிய செயல்‌ என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள்‌ இது போன்ற தவறான செய்திகளை நம்பவேண்டாம்‌ என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Views: - 7

0

0