கோவையில் கடந்த முறைவிட இந்த முறை கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் : மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!!

8 April 2021, 6:40 pm
Cbe Corporation Commissioner -Updatenews360
Quick Share

கோவை : கடந்த முறையை விட இம்முறை கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் எனவும், பாதிப்புள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்வதை தவிர்த்து மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், பொதுமக்கள் மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும், அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், அதேபோல் நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்ய வேண்டும், தனிமனித இடைவெளி, சானிடைசர், பல்ஸ் ஆக்ஸொமீட்டர் ஆகிய வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றவர், கடைபிடிக்காத நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதுடன், ஒரு வாரம் வரை மூடுவதற்கான விதி உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மக்கள் தங்கள் வீட்டு நிகழ்வுகளில் அதிகளவு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், மக்கள் தாங்களாகவே சுயக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர், முடிந்தவரை வெளியூர் செல்வதை தவிர்க்க வேண்டும் அல்லது வேறு வழியின்றி சென்றுவிட்டு திரும்புபவர்கள் 4 முதல் 5 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு 180 முதல் 220 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், 11 ஆம் தேதி முதல் கோவை மாநகராட்சி 5 மண்டலங்களிலும் நடமாடும் வாகனங்கள் மூலம் முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியவர், கடந்தாண்டு மாநகராட்சியில் 4000 முதல் 4500 உச்சபட்சமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 2500 வரை மேற்கொள்ளப்படுவதாகவும், தற்போது 31 பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதிய நோய் என்பதால் கடந்த முறை வீடு வீடாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்ததாகவும், தற்போது மக்களுக்கு இது தொடர்பான புரிதல் உள்ள போதிலும், வீடுகளில் மட்டுமே சீல் வைக்கப்பட்டு வரும் நிலையில், தெருக்கள், விதிகளை சீல் வைப்பது, வீடுதோரும் பரிசோதனை ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

காருண்யா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் விடுதி, கொடிசியா ஆகிய வளாகங்கள் கொரோனா சிகிச்சை மையத்திற்கு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை உருமாறிய கொரோனா கோவை மாநகராட்சியில் கண்டறியவில்லை என்றவர், தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்றும், தேவையான அளவு இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மாநகராட்சி 32 ஆரம்ப சுகாதார மையங்களில் இதுவரை 50 ஆயிரத்து 227 தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், மாநகராட்சி பகுதிகளில் தெற்கு மண்டலத்தில் 11 பகுதிகளும், வடக்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் தலா 10 பகுதிகளும், மேற்கு மற்றும் மத்திய மண்டலத்தில் தலா 2 பகுதிகளும் என மொத்தம் 35 வீடுகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Views: - 4

0

0