யானையை கொன்ற மனித மிருகங்கள்… சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாக் கூடாது : முக ஸ்டாலின் வலியுறுத்தல்
23 January 2021, 7:50 pmசென்னை : நீலகிரியில் காட்டு யானையை எரியும் டயரை வீசி கொலை செய்த சம்பவத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் காதில் ஏற்பட்டிருந்த தீக்காயத்துடன் சுற்றித்திரிந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த 19ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ஆனால், லாரியில் ஏற்றப்பட்டு முதுமலை முகாமுக்கு கொண்டுச் செல்லும் வழியில் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து, யானையின் உடலுக்கு 21ம் தேதி உடற்கூராய்வு செய்யப்பட்டது
இதில், யானையின் காது பகுதியில் தீ வைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. தீ காயத்தால் யானையின் காதில் உள்ள நரம்புகள் அறுபட்டு அதிலிருந்து ரத்தம் வெளியேறியது கண்டறியப்பட்டுள்ளது. ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் அனீமியா ஏற்பட்டு, யானை உயிரிந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து யானை சுற்றியிருந்த பகுதிகளில் வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மசனகுடி பகுதியில் விசாரணை மேற்கொண்டபோது, ஊருக்குள் உணவு தேடி வந்த காட்டு யானை மீது, இருசக்கர வாகனத்தின் டயரில் தீ வைத்து யானை மீது வீசியது தெரியவந்தது இதனையடுத்து, அங்கு இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மசினகுடி பகுதியைச் சேர்ந்த ரெசார்ட் உரிமையாளர் ரைமன் மற்றும் அவரது நண்பர் பிரசாந்த் ஆகியோரை பிடித்து வனத்துறை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உணவு தேடி பிரசட் பகுதிக்குள் வந்த காட்டு யானை மீது டயரில் தீ பற்ற வைத்து வீசியது வீசி அதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, அவர்கள் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், காட்டு யானையை எரியும் டயரை வீசி கொலை செய்த சம்பவத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்துப் பெருக்குகின்ற இயற்கைத் தோழன், யானை! சிறிதும் மனிதத்தன்மையற்று யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் நீலகிரியில் நடந்திருக்கிறது. இத்தகைய வன்செயல்களில் ஈடுபடும் மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டிக்க வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.
0
0