உறங்கிக்கொண்டிருந்த இளைஞரை தெறிக்கவிட்ட காட்டுயானை!!

13 September 2020, 11:14 am
Erode Elephant- Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் எதிரே உள்ள பெட்டிக் கடையை காட்டு யானை சேதப்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. நேற்றிரவு வனப்பகுதி விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று பண்ணாரியம்மன் சோதனைச்சாவடி அருகே உள்ள சாலையின் குறுக்கே வாகனங்களை வழிமறித்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

பின்னர் சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சத்தம் எழுப்பி யானையை விரட்டினர். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து மேலும் அட்டகாசம் செய்ய தொடங்கிய யானை பண்ணாரியம்மன் கோவில் எதிரே உள்ள பெட்டி கடைக்குள் புகுந்துள்ளது. சத்தத்தை கேட்ட பெட்டிக்கடைக்குள் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார்.

கடைக்குள் புகுந்த யானை கடையில் உள்ள பொருட்கள் முழுவதையும் சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதியில் கடைகள் அமைத்துள்ள அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகளை வனத்துறையினர் கண்காணித்து விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் சிறு கடைகள் நடத்தி வரும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 6

0

0