மின்சார கம்பியை மிதித்ததில் தந்தை, மகன் பலி : சம்பங்கி பூக்களை பறிக்க தோட்டத்திற்கு சென்ற போது சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2021, 1:04 pm
Father Son Dead -Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் தந்தை மகன் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிவியார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி மகேந்திரன் (வயது 54)/ இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய பூமியில் கரும்பு மற்றும் சம்பங்கி பூ பயிரிட்டுள்ளார்.

அன்றாடம் அதிகாலையில் எழுந்து சம்பங்கி பூக்களை பறித்து சத்தியமங்கலத்தில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு சென்று விற்பனை செய்வது இவரது வழக்கம். இன்று அதிகாலை 5.30 மணிக்கு சம்பங்கி பூ தோட்டத்திற்குள் புகுந்த மகேந்திரன் பூக்களை பறிப்பதற்காக சென்ற போது அங்கு அறுந்து விழுந்த கிடந்த மின்கம்பியை மிதித்ததில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

காலை 7.30 மணி வரை அவர் பூக்களை பறித்து வீட்டுக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது மகன் கவின்பிரகாஷ் (வயது 24) சம்பங்கிப்பூ தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அவர் சுய நினைவில்லாமல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மின்சாரம் பாய்ந்தது தெரிந்தும் அந்த கம்பியை பிளாஸ்டிக் பைப் மூலம் அகற்ற முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கம்பி கவின்பிரகாஷ் மீது பட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவரும் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் வழக்குப்பதிவு செய்து, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மின்சாரம் பாய்ந்து தந்தை மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 514

0

0