ஆன்லைன் Orderல் புதிய Helmetக்கு பதில் பழைய Helmet : FLIPKART கூத்து!!
26 August 2020, 2:52 pmதர்மபுரி : பிளிப்கார்ட்டில் புதிய ஹெல்மெட் ஆடர் செய்த நபருக்கு வந்த கூரியரில் புதிய ஹெல்மெட்டுக்கு பதிலாக பழைய ஹெல்மெட் வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கேகே நகரில் முன்னாள் ராணுவ வீரரின் மகன் வாசகநாத் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த 27.07.2020 அன்று, இவருடைய அண்ணன் சுபாஷ் சந்திரபோஸ் என்பவருக்காக ஆன்லைன் மூலம் பிளிப்கார்ட்டில் ஹெல்மெட் ஆர்டர் செய்தார்.
அப்போது இவர் ஆர்டர் செய்த ஹெல்மெட்டின் விலை ரூபாய் 1,795 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு சதவீதம் தள்ளுபடி போக, ஜிஎஸ்டி மற்றும் டெலிவரி சார்ஜ் உடன் சேர்த்து ரூபாய் 1898 என விலை நிர்ணயம் செய்ததை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார்.
இதனையடுத்து 08.08.2020 அன்று இவருக்கு தொலைபேசி மூலம் ஆடர் செய்த பொருளை வந்து வாங்கிக் கொள்ளவும் என தகவல் வந்ததையடுத்து வாசகநாத் நேரில் சென்று ஆர்டர் செய்த ஹெல்மட் வந்துவிட்டதாக நினைத்து பார்சலை வாங்கி வந்து தன்னுடைய பார்சலை பிரித்து பார்க்கத் தொடங்கினார்.
பார்சலை பிரிக்கும் போது சந்தேகமடைந்த இவருடைய அண்ணன் சுபாஷ் சந்திரபோஸ் செல்போன் மூலம் வீடியோ ரெக்கார்டு பதிவை செயல்படுத்தி பின்பு தொடர்ந்து இந்த பார்சலை பிரித்துள்ளார். அப்போது பிளிப்கார்ட் செயலியில் புதிய ஹெல்மெட் ஆடர் செய்ததற்கு பதிலாக பழைய ஹெல்மெட் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக பிலிப்கார்ட் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கும் வகையில் உடனடியாக புகார் செய்துள்ளார். இவர் அளித்த புகாரின் பேரில் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் கூரியரில் வந்த ஹெல்மெட்டை இம் மாதம் 12ம் தேதியன்று திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு செலுத்திய தொகையை இவருடைய வங்கி கணக்கிற்கு 18ம் தேதிக்குள் திருப்பி கொடுத்து விடுவதாக தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர். தொகையை திருப்பி கொடுப்பதாக தெரிவித்த பின்பும் 21 ஆம் தேதி 25 ஆம் தேதி என காலம் தாழ்த்தி பின்பு இவர் ஆர்டர் செய்த ID நம்பரை நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என தெரிவித்து இதுநாள் வரை இவர் செலுத்திய பணம் திருப்பி அனுப்பவில்லை.
ஹெல்மெட் வாங்க வேண்டும் என்ற ஆசையில் தனக்கு நேர்ந்த ஏமாற்றம் வேறு எந்த நபருக்கும் வரக்கூடாது என தெரிவித்தது மட்டுமல்லாமல் இது போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏழை எளிய மக்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பொருட்களை தரத்துடன் அளிக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.