திருநீர்மலை குப்பை கிடங்கில் விண்ணை முட்டும் நச்சுப்புகை : நடவடிக்கை கோரும் பொதுமக்கள்..!!!

6 February 2021, 5:55 pm
thirumalai pudur - updatenews360
Quick Share

சென்னை : சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் வைக்கப்பட்டுள்ள தீயினால் எழுந்துள்ள புகையால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குப்பையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து என ஒவ்வொரு நிலைகளுக்கும் குப்பை வண்டிகள் நேரடியாக பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். அப்படி, சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளின் ஈரக் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் மற்றும் உயிரி எரிவாயு தயாரிக்கப்பட்டு வருகிறது.

உலர்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு, மறுஉபயோகம் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள குப்பைகள் நகருக்கு வெளியே கொட்டப்பட்டு, அழிக்கப்படும் பணிகள் நடக்கிறது.

இப்படியிருக்கையில், செங்கல்பட்டு மாவட்டம், சென்னை பல்லாவரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு, தேக்கம் செய்யப்பட்டுள்ளன. குப்பைகள் திறந்த வெளியில் கிடப்பதால், நாய் உள்ளிட்டவை குப்பைகளை பிற பகுதிகளுக்கும் பரப்பி விடுகின்றன.

இந்த நிலையில், தற்போது அந்தக் குப்பைகளுக்கு தூய்மை பணியாளர்கள் சிலர் தீவைத்துள்ளனர். இதனால், விண்ணுயரத்திற்கு எழுந்துள்ள புகையால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்தப் புகையினால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, திருநீர்மலையில் கொட்டப்படும் குப்பைகளை, யாருக்கும் பாதிப்பில்லாதவாறு அழிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 30

0

0