அரசு மருத்துவமனை பெண் ஊழியர் கொலை: போலீசார் விசாரணை

Author: Udhayakumar Raman
28 November 2021, 6:54 pm
Quick Share

திண்டுக்கல்: வத்தலகுண்டில் அரசு மருத்துவமனை பெண் ஊழியர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த கண்ணன் நகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி(58). இவர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனை ஊழியராக பணிபுரிந்து வந்தார். கணவர் காளியப்பன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவரது மகன் முத்துக்குமார்(45) திருமணமாகி விருவீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். இதனால், சுப்புலட்சுமி வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்த நிலையில், சுப்புலட்சுமி கடந்த 2 நாட்களாக மருத்துவமனைக்கு பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனை ஊழியர்கள் சுப்புலட்சுமியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.இதனால் சந்தேகமடைந்த அரசு மருத்துவமனை ஊழியர்கள், இதுகுறித்து அவரது மகன் முத்துக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, முத்துக்குமார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது காம்பவுண்ட் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனை அடுத்து, ஜன்னல் வழியாக சென்று பார்த்தபோது சுப்புலட்சுமி குளியலறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துகுமார், உடனடியாக வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.அதன் பேரில், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். அரசு மருத்துவமனை செவிலியர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Views: - 289

0

0