நாளை கிராம சபை கூட்டம் : யாரெல்லாம் கலந்து கொள்ளக் கூடாது?
1 October 2020, 10:26 amகோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் யாரெல்லாம் கலந்து கொள்ள வேண்டாம் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
காந்தி ஜெயந்தி தினமான நாளை காலை 11 மணிக்கு கோவையில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்து விவாதித்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் விவாதிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், கொரோணா தொடர்பான அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள், மிகவும் வயதானவர்கள் மற்றும் கைக்குழந்தைகள், காய்ச்சல் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பொது மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.