கோவையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: சாலைகளில் தேங்கிய தண்ணீர்…..வாகன ஓட்டிகள் அவதி…!!

15 April 2021, 8:53 am
cbe rain - updatenews360
Quick Share

கோவை: கோவையில் நள்ளிரவில் பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை நகரில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பிற்பகல் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது . இந்நிலையில் நேற்று இரவும் நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

குறிப்பாக உக்கடம், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், ராமநாதபுரம் , பீளமேடு, காளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. குறிப்பாக ரயில் நிலையம் அருகே உள்ள பாலத்தில் கீழ் பகுதியிலும், மேட்டுப்பாளையம் சாலையில் கிக்கானி பள்ளி அருகே உள்ள பாலத்தின் கீழ் பகுதியிலும் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதே போல உக்கடம் புற வழிச்சாலை உட்பட பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் அதிகாலையிலேயே பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்ட பொதுமக்கள் , தேங்கிய தண்ணீரில் வாகனங்களை உருட்டி செல்லும் நிலை ஏற்பட்டது. தொடர்ச்சியாக இன்னும் சில தினங்களுக்கு மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், கடும் வெயிலால் தவித்த கோவை மக்கள் குளிர்ச்சியான சூழல் திரும்பியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 12

0

0