தனித்தேர்வாளர்கள் தேர்ச்சி குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார் : அமைச்சர் செங்கோட்டையன்!!

27 August 2020, 4:07 pm
minister sengottaiyan - updatenews360
Quick Share

ஈரோடு : தனித்தேர்வாளர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் குறைவு என்பது போன்ற குறிப்புகள் இல்லை. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தான் பதில் கூற வேண்டும். நீட்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. அதற்காக நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகள் தான் தேர்ச்சி செல்லும் என்ற நிலையில், அதை நிரந்தரமாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்து முடிவு எடுக்கும். அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் போது, இதையும் கூடுதலாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தனித்தேர்வாளர் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும். நூலகர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மலை கிராமத்தில் உள்ள மாணவர்கள் மின் வெட்டால் பாதிக்கப்படும் நிலையில் யூடியூப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து படிக்கலாம். எந்தெந்த பகுதியில் இதுபோன்ற குறை உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். 10,12 முடித்தவர்கள் ஆன்லைன் மூலமாகவே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நிதிநெருக்கடி காரணமாக 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க முடியாத நிலை உள்ளது, என்று தெரிவித்தார்

Views: - 6

0

0