500 காளைகள் பங்கேற்ற குமாராபாளையம் ஜல்லிக்கட்டு: சீறிய காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்..!!

24 January 2021, 7:19 pm
Quick Share

நாமக்கல்: குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 500 காளைகள் பங்கேற்றன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக முதலில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் உறுதிமொழியை வாசித்தார். அதனை தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதன்பின் அமைச்சர் தங்கமணி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், சரோஜா, டாக்டர் விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விழாவில் முன்னிலை வகித்தனர்.

இப்போட்டியில் சுமார் 500 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க ஒரு மணி நேரத்திற்கு 50 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். மாடுபிடி வீரர்கள் கைகளுக்கு சிக்காமல் திமிறிக்கொண்டு எகிறி குதித்து பல காளைகள் ஓடியது. காளைகளை அடக்க மாடு பிடிவீரர்கள் மல்லுகட்டினர். அப்போது பார்வையாளர்கள் காளைகளையும், வீரர்களையும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு கட்டில், பீரோ, குடம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 5 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன. இப்போட்டியை காண நாமக்கல், ஈரோடு, திருச்செங்கோடு, குமார பாளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆரவாரம் எழுப்பி மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.

Views: - 0

0

0