3 மாத ஆண் குழந்தை விற்பனை: 3 பேர் கைது

26 November 2020, 11:55 pm
Quick Share

திருப்பூர்: காங்கேயம் அருகே 3 மாத ஆண் குழந்தை ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி நகரைச் சேர்ந்தவர் முருகன் (31). இதே பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (22). இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொணடனர். இதற்கு இருவரின் குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தம்பதியர் வீட்டை விட்டு வெளியேறினர். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் கவிதாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், இருவரும் குழந்தையை வளர்த்து வந்த நிலையில், கடந்த 5 நாள்களுக்கு முன் காங்கேயம் அருகே மொட்டரப்பாளையம் கிராமத்திற்கு வந்து அங்கு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.

இந்த சூழ்நிலையில் வேலையின்மை, வறுமை காரணமாக இருவரும் குழந்தையை தொடர்ந்து வளர்க்க முடியாது எனக் கருதி, குழந்தையை விற்க முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், காங்கேயம் அடுத்துள்ள கீரனூர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (40), விஜி (34) தம்பதியர் குழந்தையை வாங்க முடிவு செய்தனர்.இந்தத் தம்பதியருக்கு 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் முருகன், கவிதா தம்பதியின் குழந்தையை ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பூர் சைல்டுலைன் அலுவலர் மாதவனுக்கு தகவல் தெரிய வந்தது. இதையடுத்து மாதவன் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கவிதா, விஸ்வநாதன், விஜி ஆகியோரை மகளிர் காவல்துறை கைது செய்து, தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Views: - 23

0

0