நண்பனை கம்பத்தில் கட்டி வைத்து, முட்டை அடித்து.. கொரோனாவை மறந்த பிறந்தநாள் கொண்டாட்டம்.!!

4 August 2020, 11:39 am
Kanya Bday Celebrations - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே நண்பனை கட்டி வைத்து அவர் மீது கலர்பொடிகள் தூவி முட்டைகளை அடித்து நண்பர்கள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். பொதுவாக வீடுகளில் உற்றார், உறவினர், குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடுவதுடன், கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்து தான தருமங்கள் செய்து பிறந்தநாள் கொண்டாடுவது தான் வழக்கம்.

ஆனால் இன்றைய தலைமுறைகள் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபத்துகளை விலை கொடுத்து வாங்குவதும் தங்களது நண்பர்களுடன் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கேக் வெட்டி கொண்டாடுவதும், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விடுவதும் வாடிக்கையாகி விட்டது.

அப்படி ஆபத்தான வகையில் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள திட்டுவிளை பகுதியில் மாணவர் ஒருவரது பிறந்த நாளை அவருடைய நண்பர்கள் கொண்டாடிய விதம் வினோதமாக இருந்தது.

அதன்படி நண்பனின் பிறந்த நாளை அறிந்த அவருடைய நண்பர்கள், பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்தனர். அதனை எப்படி கொண்டாடுவது என ஆளுக்கொரு யோசனை. முடிவில் அவர்கள் அனைவரது ஆலோசனைக்கு பிறகு பிறந்த நாள் கொண்டாட்டம் வினோதமாக அரங்கேறியது.

அதாவது, அவருடைய நண்பர்கள் மற்றும் அவனைவிடவும் வயது மூத்தவர்கள் ரோட்டோரமாக அமர்ந்து இருந்து கேக் வெட்டிய பிறகு மரத்தில் அவனது கைகளை கட்டி வைத்தனர். அப்போது இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து பின்பக்கமாக கட்டி வைத்து இருந்தனர். முதலில் நண்பர்கள் ஒவ்வொருவராக முட்டைகளை அவன் மீது உடைக்கின்றனர். அப்போது உடலில் முட்டையை அடிக்கும்போது அண்ணா வலிக்கிறது அண்ணா என அந்த இளைஞர் கூறினார்.

முட்டையை உடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நண்பர்கள் உற்சாக மிகுதியால் விதவிதமான கலர்பொடியை உடலில் எல்லா இடங்களிலும் பூசினர். தொடர்ந்து முட்டைகளை தலையில் உடைத்து உடல் முழுவதும் அபிஷேகம் செய்தனர். இந்த முட்டை மற்றும் கலர்பொடிகள் கொண்டாட்டம் முடிந்த பிறகு அதன்பிறகு அவனது கைகளை அவிழ்த்து விட்டனர். இப்படித்தான் இந்த வினோத பிறந்த நாள் கொண்டாட்டம் அரங்கேறி முடிந்தது.

இதனை வீடியோ எடுத்த நண்பர்கள் அதனை வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் இப்படி பகல்நேரத்தில் அரங்கேறிய இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் குமரி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்களை பூதப்பாண்டி காவல்நிலைய போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே மாவட்டத்தில் கடந்த முறை இரணியல் பகுதியில் இது போன்று பிறந்தநாள் கொண்டாடியவர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0