கழுத்தை நெரிக்கும் கடன்… வாழவே முடியல : கடிதம் எழுதி வைத்து விட்டு இருசக்கர வாகன வியாபாரி தூக்கிட்டு தற்கொலை!!

Author: Babu Lakshmanan
7 September 2021, 12:45 pm
karur suicide - updatenews360
Quick Share

கரூர் : கரூரில் கடன் பிரச்சனை காரணமாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு பழைய இருசக்கர வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் நகராட்சி சின்னாண்டான் கோவில் ரோடு பசுபதி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (55). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையில் கடந்த 15 வருடங்களாக வெங்கடாஜலபதி ஆட்டோ கன்சல்டிங் என்ற பெயரில் பழைய இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் நடத்தி வந்துள்ளார். தொழில் நன்றாக சென்ற நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தெரிந்தவர்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக, அதிக அளவு கடன் பெற்று அதனை சமாளிக்க முடியாமல் இருந்து வந்துள்ளார்.

தொழிலுக்காக வாங்கிய கடனையும், வட்டியையும் பல லட்சம் திருப்பிச் செலுத்திய பிறகும், மேற்கொண்டு கடன் வாங்கிய நபர்களிடம் இருந்து அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று தனது இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், தான் தற்கொலை செய்துகொண்ட பிறகு தனது குடும்பத்திற்கு எந்த மிரட்டலும், பாதிப்பும் வரக்கூடாது என்று கரூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 437

0

0