பழனி கோவிலுக்கு வந்த கேரள பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்? தமிழக டிஜிபிக்கு கேரள டிஜிபி எழுதிய அவசர கடிதம்..! திடுக்கிடும் தகவல்!!

11 July 2021, 9:39 am
Kerala DGP TN DGP - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கேரளாவில் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண்ணை பழனி கோவில் அருகே கூட்டுப்பாலியல் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதால் கேரள டிஜிபி, தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணை விசாரித்தபோது மூன்று நபர்கள் தன்னை கற்பழித்து விட்டதாக கூறியதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக கண்ணூர் போலீஸாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் காத்திருந்தது. கடந்த மாதம் 19ஆம் தேதி பழனிக்கு தானும் தனது கணவரும் சென்றதாகவும், அப்போது பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது தனது கணவர் அருகில் இருந்த கடைக்கு சென்று விட்ட நிலையில் மூன்று நபர்கள் தன்னை கடத்திச் சென்று அருகில் இருந்த தங்கும் விடுதியில் அடைத்து வைத்ததாக கூறியுள்ளார்.

பின்னர் தன்னைத் தேடிவந்த கணவரை அந்த கும்பல் அடித்து விரட்டிவிட்டு இரவு முழுவதும் தங்கும் விடுதியில் வைத்து தொடர்ச்சியாக கற்பழித்ததாகவும், காலையில் தங்கும் அறையில் இருந்து தப்பி வெளியே வந்து தனது கணவரை சந்தித்து நடந்ததை எடுத்துக் கூறியதாகவும், கணவருடன் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும் சென்றபோது போலீசார் புகாரை வாங்க மறுத்து விரட்டி அடித்ததால் வேறுவழியின்றி சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டதாகவும், காமக் கொடூரர்கள் செய்த சித்திரவதையால் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசாரிடம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இந்த கற்பழிப்பு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கேரள போலீசார் பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனிக்கு வந்த பெண்ணை காம கொடூரர்கள் கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பழனி போலீசாரிடம் கேட்டபோது போலீசார் இந்த சம்பவம் உண்மையல்ல என மறுத்து வருகின்றனர். ஆனால் மலை அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், விடுதி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களை காவல்நிலையத்திற்க்கு அழைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பழனி அடிவார காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கேரள டிஜிபி அனில்காந்த் கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் டிஜிபி சைலேந்திரபாபு இடமிருந்து துறை ரீதியாக உத்தரவு மற்றும் காவல்துறையினர் மீது விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Views: - 352

1

0