பொங்கல் பரிசுத்தொகுப்பில் பல்லி…குற்றம்சாட்டியவர் மீது வழக்கு: மனஉளைச்சலில் மகன் தீக்குளித்து தற்கொலை..!!

Author: Aarthi Sivakumar
12 January 2022, 10:31 am
Quick Share

திருத்தணி: பொங்கல் தொகுப்பு தரம் குறித்து வீடியோ வெளியிட்ட நபரின் மகன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தைப் பொங்கல் திருநாளை ஏழை, எளிய மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு ,நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது.

இதனிடையே, தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு தரமானதாக இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினார்.
அதனை மெய்பிக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திருக்குளம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் நந்தன் என்பவர் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கியுள்ளார்.

திருத்தனியைச் சேர்ந்த குப்புசாமி(36) சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தந்தை நந்தன் அதிமுக திருத்தணி 15 வது வட்ட துணை செயலாளராகவும், மனித உரிமை கமிஷனில் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.

அதனை வீட்டிற்கு எடுத்துச்சென்று பிரித்து பார்த்த போது பரிசுத் தொகுப்பில் இருந்த புளி பாக்கெட்டில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், இதுகுறித்த வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பேசு பொருளாகியது.

இந்நிலையில் தமிழக அரசு மீது களங்கம் விளைவிப்பதாக கூறி நந்தன் மீது ரேசன்கடை ஊழியர் சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் மூலம் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக இவரது தந்தை நந்தன் மீது திருத்தனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் நந்தனும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

இந்நிலையில் நந்தனின் மகன் குப்புசாமி (வயது 36), பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர். திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் பொங்கல் தொகுப்பு தரம் குறித்து வீடியோ வெளியிட்ட நபர் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசுக்கு எதிர்கட்சி சட்டமன்றத் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், தற்கொலைக்கு முயன்ற நந்தனின் மகன் குப்புசாமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். குற்றம் சொல்லியதற்குக் கைது செய்வதா? நியாயமான குற்றச்சாட்டுகளை மக்கள் கூறுவது தீர்வை எதிர்நோக்கியே தவிர தீ குளித்து தற்கொலை செய்துகொள்வதற்கு அல்ல என பலர் வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 307

0

0