‘தேர்தல் நேரம்… இது எல்லாம் சகஜமப்பா’ : ராமதாஸ் விமர்சனம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதில்..!

22 October 2020, 4:37 pm
ramadoss - jayakumar - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் நடந்து வரும் அதிமுக அரசின் ஆட்சி குறித்த பாமக நிறுவனர் ராமதாஸின் விமர்சனத்திற்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் அங்கம் பாமக அங்கம் வகித்துள்ள நிலையில், அரசின் ஆட்சியை விமர்சித்து அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் இன்று கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் கூறியிருப்பதாவது :- ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை….. செய்யவும் மறுக்கிறார்கள்!, எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், ராமதாஸின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர் பதிலளித்தாவது :- ஆட்சி தொடர்பாக விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. தமிழகத்தில் அதிமுக அரசின் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்றி, சமூக நீதியை பேணுவது அதிமுக அரசுதான்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக உள்ளது. கூட்டணி கட்சிகள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக இதுபோன்று ஆயிரம் விஷயங்களை கூறுவார்கள். ராமதாஸின் இந்த விமர்சனத்தினால் அதிமுக கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படப்போவதில்லை. ராமதாஸின் விமர்சனம் குறித்து தமிழக அரசு, ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கும், எனத் தெரிவித்தார்.

Views: - 0

0

0