அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவு நனவாகியது : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!!

30 October 2020, 4:30 pm
SP Velumani - Updatenews360
Quick Share

சென்னை : ஆளுநர் ஒப்புதல் அளித்ததன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான கனவு நனவாகியுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. மேலும், ஆளுநரின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து முடிவெடுக்க 3 அல்லது 4 வாரங்கள் தேவை என ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. சட்டப்பிரிவு 162-ஐ பயன்படுத்தி தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

governor - neet - updatenews360

இந்த நிலையில், மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போதைய சட்டத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான கனவு நனவாகியுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் தாமதித்த நிலையில், கொள்கை முடிவின் அடிப்படையில் அரசாணை வெளியிட்டு மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவை நனவாக்கியது மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான அரசு.

அந்த மசோதாவிற்கு தற்போது ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம், கொண்ட கொள்கையில் நிலையாக இருந்து மாணவ சமுதாயத்தின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றும் அரசு, மாண்புமிகு முதலமைச்சர், அண்ணன் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அம்மாவின் அரசு என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.