கிராமத்திற்கே கல்வி கற்றுக் கொடுத்த முதல் பட்டதாரி இளம்பெண்ணுக்கு மேலும் ஒரு மகுடம் : கல்பனா சாவ்லா விருதுக்கு பரிந்துரை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2021, 4:52 pm
Kalpana chawla Award - Updatenews360
Quick Share

கோவை : மலைவாழ் கிராம மக்களுக்கு வகுப்புகள் நடத்திய சின்னாம்பதி கிராமத்தை சேர்ந்த முதல் பட்டதாரி இளம்பெண் சந்தியா, கல்பனா சாவ்லா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாம்பதி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சந்தியா. கொரோனா கால ஊரடங்கால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த பகுதி மாணவ,மாணவிகளுக்கு இணையதளம் ஆன்லைன் போன்ற வசதிகள் இல்லாததால் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கிராமத்திலேயே முதல் பட்டதாரியான இளம்பெண் சந்தியா, சின்னாம்பதி பழங்குடி கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுக்க துவங்கினார்.

பள்ளி செயல்படுவது போலவே, காலை 8 முதல் 12 மற்றும் மாலை 3 முதல் 6 மணி வரை சிறப்பு வகுப்புகளை எடுத்து வந்தார். இந்நிலையில் இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் நேரில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இளம்பெண் சந்தியா கல்பனாசாவ்லா விருது பெற பரிந்துரைக்கபடுவார் என தகவல் வந்ததை தொடர்ந்து, கிராம மக்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் மாவுத்தம்பதி ஊராட்சி தலைவர் கோமதி செந்தில் குமார் சந்தியாவை நேரில் சந்தித்து பாடம் நடத்த தேவையான வசதிகளை செய்து தருவதாக தெரிவித்தார்.

தாம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து சந்தியா கூறுகையில், இந்த அறிவிப்பு தமக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக இருப்பதாகவும், பழங்குடி கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்ல முடியாமல் உள்ள குழந்தைகளும் ஆர்வமுடன் கல்வி கற்பதாக அவர் தெரிவித்தார்.

Views: - 200

0

0