நின்றிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து : முன்னாள் விமானப்படை வீரர் மற்றும் அவரது மகன் பலி!!

20 April 2021, 7:42 pm
Dgl accident -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் விமானப் படை வீரரும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் கரூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மதுரைக்கு எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு கொடுமுடியைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் லாரியை ஓட்டி கொண்டு வந்தார்.

அப்போது ரங்கநாதபுரம் அருகே திடீரென லாரியின் பின்பக்க டயர் பஞ்சர் ஆனதால் சாலையோரம் நிறுத்தி பஞ்சர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதே போல திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கதிர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த முன்னாள் இந்திய ராணுவ விமானப் படை வீரராக பணியாற்றி ஓய்வு பெற்ற 77 வயதான கோவிந்தராஜ், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கரூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து விட்டு குடும்பத்தினருடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

முன்னாள் ராணுவ படை வீரரின் குடும்பத்தினர் ஆம்னி வேனில் திரும்பிக் கொண்டடிருந்தனர். அந்த வேனை ஒட்டுநர் நாகராஜ் என்பவர் இயக்கினார். அப்போது ஆம்னி வேன் நின்று கொண்டு இருந்த லாரியின் பின்பக்கமாக பயங்கரமாக மோதியது.

இதில் காரில் பயணித்த முன்னாள் இந்திய விமானப்படை வீரர் கோவிந்தராஜன் மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் கோவிந்தராஜன் மனைவி பாரதி தலையில் பலத்த காயமடைந்து வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட ஓட்டுநர் நாகராஜனை வேடசந்தூர் தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை வேடசந்தூர் 108 வாகனம் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூம்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் பலியான கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோரது உடல்களை காரின் இடிபாட்டுக்குள் இருந்து மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தக் கோர விபத்தால் கரூர் திண்டுக்கல் தேசிய நான்கு வழி சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 110

0

1