நிச்சயம் அடுத்த முறை தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன்:மாரியப்பன் பேட்டி!

Author: Udhayakumar Raman
5 September 2021, 9:49 pm
Quick Share

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் சேலத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்நிலையில் அவர், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த மாரியப்பனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். அச்சமயம் குரூப் 1 பிரிவில் வேலை, தமிழ்நாடு பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனுக்கு அங்கீகாரம், வீரர்களுக்கு தொடர் பயிற்சி உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வலியுறுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. அரசு வேலை வழங்குவதாக கூறினார். தங்கம் வெல்லும் குறிக்கோளுடன்தான் சென்றேன். ஆனால் மழையால் களம் ஈரமாக இருந்ததால் சரியாக தாண்ட முடியவில்லை. நிச்சயம் அடுத்த முறை தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன். போட்டி தொடங்குவதற்கு முன் தொலைபேசி வழியாக பக்கத்து வீட்டு பையனிடம் பேசுவது போல பேசி நன்றாக ஊக்கப்படுத்தினார். சாதாரண விளையாட்டுகளுக்கு நல்ல முக்கியத்துவம் தருவதுபோல, பாரா விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தர கேட்டுக் கொண்டுள்ளேன். அதன் மூலம் பாரா விளையாட்டு போட்டிகளிலும் நிறைய தடகள வீரர்கள் உருவாவார்கள். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்” என்றார். இந்த நிகழ்வின் போது தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பியும் உடன் இருந்தார்.

Views: - 211

0

0