பேரறிவாளனுக்கு பரோல் தரக்கோரிய வழக்கு…! அரசை பார்த்து ஹைகோர்ட் கேட்ட கேள்வி

3 August 2020, 9:01 pm
PERARIVALAN - updatenews360
Quick Share

சென்னை: பேரறிவாளனுக்கு தற்போது பரோல் வழங்க தேவையில்லை என்று உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களில் ஒருவர் பேரறிவாளன். கொரோனா காலம் என்பதால் அவருக்கு 90 நாட்கள் பரோல் தருமாறு அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிடம் மனு அளித்திருந்தார். மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் இந்த மனு கொடுத்திருந்தார்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந் நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பேரறிவாளன் உடல்நிலை நன்றாக இருப்பதால் பரோல் அவசியம் இல்லை, 2019ல் பரோல் வழங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பரோல் குறித்து பரிசீலிக்க முடியும் என்று தமிழக அரசு தெரிவித்தது.

அப்போது பேரறிவாளன் உடல்நிலை மோசமாகி ஐசியுவில் சேர்க்கப்பட்ட பிறகு தான் பரோல் மனு பரிசீலிக்கப்படுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உரிய விளக்கம் தர தமிழக அரசு தரப்பு அவகாசம் கோரியதால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.