தமிழக அரசு அறிவித்த குடும்ப கடன் ரூ.2.64 லட்சம்: ஆர்டிஓ அலுவலகத்திற்கு காசோலையுடன் வந்த நபர்…நாமக்கல்லில் பரபரப்பு..!!

Author: Aarthi Sivakumar
10 August 2021, 4:43 pm
Quick Share

நாமக்கல்: தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் இருப்பதாக வெள்ளை அறிக்கை வெளியீட்டின் போது தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த தொகையை காந்தியாவதி ஒருவர் செக் மூலம் செலுத்த நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நேற்று தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில், தமிழக அரசுக்கு 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன்சுமை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேட்டை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் என்பவர் முதல் நபராக தனது குடும்பத்துக்கான கடன் தொகையை செக் மூலம் செலுத்துவதற்காக நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தார். ஆர்.டி.ஓ., கோட்டைக்குமாரை சந்தித்து தன்னிடம் வைத்திருந்த இரண்டு லட்சத்து, 63 ஆயிரத்து 976 ரூபாய்க்கான வங்கி காசோலையை அளித்தார்.

அந்த செக்கை வாங்க மறுத்த, ஆர்.டி.ஓ., இந்த செக்கை பெறுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை உயர் அதிகாரிகளிடம் வழங்குங்கள் என தெரிவித்தார். அப்போது, காந்தியவாதி ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக நிதியமைச்சர் அறிவித்த அரசு கடன் தொகையில் எனது குடும்பத்துக்கான பங்கை முதல் நபராக ரூ.2,63,976 செக் மூலம் செலுத்த, ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தேன்.

ஆனால், ஆர்.டி.ஓ., அதை ஏற்க மறுத்து உயர் அதிகாரிகளிடம் வழங்க கூறியுள்ளார். நான் இந்த செக்கை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளேன். பொதுமக்கள் அனைவரும் அரசு வைத்துள்ள கடனை கட்டவேண்டும். அப்படி செலுத்துபவர்களுக்கு சுய தொழில் துவங்குவதற்காக அரசு வங்கி மூலம் 15 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தும் வகையில் கடன் வழங்க வேண்டும்.
அதன்மூலம், பொதுமக்கள் சுய தொழில் செய்து பொருளாதார ரீதியாக முன்னேறுவர். நாட்டின் பொருளாதாரமும் உயரும். இவ்வாறு அவர் கூறினார். அரசின் கடனை செலுத்துவதாக, வங்கி செக்குடன் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 798

2

0