அக்னி கலசம் சேதம்…! ஆவேச எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்..!

10 August 2020, 1:36 pm
pmk ramadoss updatenews360
Quick Share

சென்னை: கள்ளக்குறிச்சியில் அக்னி கலசத்தை சேதப்படுத்தியவர்களை  குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மண்மலை பகுதியில் பாமக கொடிக்கம்பம் அருகே அமைக்கப்பட்டிருந்த சிங்கம் சிலை, அக்னி கலச சின்னத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதியில் உள்ள பாமக நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந் நிலையில் அக்னிகலசம் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்ப மேடையில் அமைக்கப்பட்டிருந்த அக்னி கலசத்தையும், சிங்கம் சிலையையும் சமூக விரோதிகள் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். கோழைத்தனமான இந்த ஈனச் செயல் கண்டிக்கத்தக்கது!

கொள்கை அடிப்படையில் பா.ம.க.வை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாத கோழைகள் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் பா.ம.க.வின் வளர்ச்சியை தடுக்க முடியாது. ஒரு கிராமத்தில் அக்னிகலசம் சேதப்படுத்தப்பட்டால் ஆயிரம் கிராமங்களில் அக்னி கலச சின்னம் பாட்டாளிகளால் அமைக்கப்படும்!

மண்மலை கிராமத்தில் பாட்டாளிகளின் அடையாளமான அக்னி கலசத்தையும், சிங்கச் சிலையையும் சேதப்படுத்திய கயவர்களை மன்னிக்கக் கூடாது.  அவர்களை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்! என்று கூறி உள்ளார்.

Views: - 5

0

0