இதுதா.. என்ன கடிச்சது.. ‘பா…பா…பாம்பு’ – தெறித்து ஓடிய ‘மருத்துவர்கள்’..!

23 February 2020, 3:28 pm
Quick Share

ராமநாதபுரம் :ராமநாதபுரம் அருகே உள்ள தொண்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சேதுவின் வீட்டின் அருகே கட்டுவிரியன் பாம்பு ஒன்று கிடந்ததைக் கண்டு அதனை விரட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது பாம்பு அவ்விடத்தை விட்டு நகராமல் இருக்கவே, அதை கையில் எடுக்க முயன்ற போது, திடீரென அந்த பாம்பு சேதுவின் கைகளை சுற்றிக் கொண்டு சில நொடிகளில் அந்த பாம்பு சேதுவை கொத்தியது.

வலியால் துடித்த சேதுவை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காப்பாற்றி பாம்பை அவர்கள் அடித்து கொன்றனர். இதையடுத்து, தொண்டி மருத்துவமனையில் சேதுவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, தன்னை கடித்த பாம்பை சேது கையுடன் எடுத்துச் வந்துள்ளார்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் என்ன பாம்பு கடித்தது என சேதுவிடம் கேட்டபோது, உடனே, தான் வைத்திருந்த பையிலிருந்து சுமார் 3 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை வெளியே எடுத்து பாட்டி உள்ளார். இதனால் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் தெறித்து ஓடினர்.

சேது கொண்டு வந்த பாம்புக்கு உயிர் இல்லை என்று தெரிந்த பின்னரே, அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிறகு, சேதுவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், “கடித்தது என்ன பாம்பு எனத் கூறினாலே போதும். அதற்காக கடித்த பாம்பையே உடன் எடுத்து வர தேவையில்லை” என அறிவுரை கூறி அனுப்பி உள்ளனர்.