கோவில்களுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் அமல்: தெருக்கூத்து கலைஞர்கள் நூதன முறையில் கோரிக்கை..!!

10 April 2021, 2:17 pm
chengalpat - updatenews36 0
Quick Share

செங்கல்பட்டு: இன்று முதல் கோவில் திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் முடங்கி போயுள்ள தெருக்கூத்து கலைஞர்கள் நடனமாடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்ற நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இன்று முதல் தமிழகத்தில் பல்வேறு கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதில் ஒன்றாக கோவில் திருவிழா, நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு தெருக்கூத்து கலைஞர்கள் நடனமாடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், கல்பாக்கம், மதுராந்தகம் மற்றும் திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்களின் குடும்பங்கள் உள்ளதாகவும், தற்போது சித்திரை முதல் ஐப்பசி மாதம் வரை மட்டுமே தமிழகத்தில் கோவில் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் போது பொதுமக்கள் கண்டு களிக்க தெருக்கூத்து, நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அந்நிகழ்ச்சிகளில் மகாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட இதிகாச புராணங்களை பொதுமக்களுக்கு மொழிநடையில் நடித்து சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பர்.

கடந்த வருடம் ஊரடங்கால் முடங்கி போன தெருக்கூத்து கலைஞர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர். பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை‌. தற்போது தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை வீசி வருவதால் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதில் ஒன்றாக கோவில் திருவிழா பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே தமிழக அரசு முன்வந்து தமிழகம் முழுவதும் உள்ள தெருக்கூத்து கலைஞர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 59

0

0