இடைத்தேர்தலில் ரூ.20…பொதுத்தேர்தலில் ரூ.2000 : குக்கரை நம்பி ஏமாந்து போன கும்பகோணம் மக்கள்!!

8 April 2021, 11:28 am
AMMK Token issue -Updatenews360
Quick Share

தஞ்சை : கும்பகோணத்தில் 2000 ரூபாய் டோக்கன் கொடுத்து குக்கருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்படும் என கடையின் பெயரை அறிவித்து டோக்கன் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்ற முடிந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு கட்சி சின்னம் பொறிக்காத 2000 ரூபாய் டோக்கன் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோழபுரம், தாராசுரம், பம்பபடையூர், சுவாமிமலை போன்ற இடங்களில் வழங்கப்பட்டுள்ளன.

கும்பகோணம் பெரிய கடைத் தெரு பட்ராச்சாரியார் தெருவில் பிரியம் மளிகை ஏஜென்சி என்ற பெரிய கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு துண்டுச்சீட்டு போன்ற டோக்கனுடன் வந்த வாடிக்கையாளர்கள் சிலர் அந்த கடையின் பெயர் பொறித்து 2000 ரூபாய் என எழுதியுள்ள டோக்கனை கொடுத்துள்ளனர்.

ஓட்டு போடுவதற்காக அரசியல் கட்சியினர் பணத்திற்கு பதிலாக தங்கள் கடையில் இலவசமாக மளிகை பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் கொடுத்துள்ளனர் என கூறியுள்ளனர்.

டோக்கனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியம் ஏஜென்சியின் உரிமையாளரும் அதிமுக பிரமுகருமான ஷேக் முகமது தான் யாருக்கும டோக்கன் வழங்கவில்லை என கூறியுள்ளார். இந்த டோக்கனுக்கு மளிகை பொருட்கள் வழங்க முடியாது, இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்தார்.

இந்த டோக்கனை கொடுத்தது யார் என்று வாக்காளர்களிடம் கேட்டால் பதில் கூற மறுக்கின்றனர். இது அரசியல் கட்சி செய்துள்ள போலி டோக்கன் என்று புரிந்தாலும், வாக்காளர்கள் கூட்டம் கடை முன்பு அதிகரிக்க தொடங்கியதால், கடுப்பான ஷேக் முகமது கடையை பூட்டி கதவில், வேட்பாளர் கொடுத்த டோக்கனுக்கு எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஒட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்ட போது, ஆர் கே நகர் டெக்னிக்கை கும்பகோணத்தில் அமமுகவினர் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் 2000 ரூபாய் டோக்கன் வழங்கியது அமமுக ஒன்றிய செயலாளரான பாலமுருகன் என்றும் அவர் வெள்ளிக்கிழமை அந்த கடைக்கு அருகில் வந்து பணம் பெற்றுக் கொள்ளும்படி தான் சொன்னாரே தவிர மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ள சொல்லவில்லை என அமமுக மாவட்ட துணை செயலாளர் வடிவேல் வாண்டையார் கூறியுள்ளார்.

ஆர்கே நகரில் டிடிவி போட்டியிட்ட போது, 20 ரூபாய் டோக்கன் கொடுத்து குக்கருக்கு வாக்கிளத்து ஒரு வாரம் கழித்து 20 ஆயிரம் பெற்றுக்கொள்ளுங்கள் என ஏமாற்றிய சம்பவத்திற்கே இன்னும் பதில் கிடைக்காத நிலையில் கும்பகோணம் சுற்று வட்டாரத்தில் 2000 ரூபாய் டோக்கன் கொடுத்த சம்பவம் வாக்காளர்களின் ஏமாற்றத்தையே காண்பிக்கிறது.

கும்பகோணத்தில் 2000 ரூபாய் டோக்கன் கொடுத்த சம்பவம் குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 4

0

0