சுயதொழில் செய்து சுயமாக சம்பாதிக்கும் திருநங்கைகள்!! திருப்பம் ஏற்படுத்திய திருநங்கைகள்!!

Author: Udayachandran
15 October 2020, 1:43 pm
transgender - Updatenews360
Quick Share

மதுரை : கறவை மாடு வளர்த்து சுயதொழில் செய்து வரும் திருநங்கைகளின் வாழ்க்கை சம்பவம் காண்போர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மதுரை மதிச்சியம் பகுதியில் 12 திருநங்கைகள் ஒன்றிணைந்து கறவை மாடுகளை வளர்த்து சொந்தமாக பால் வியாபாரம் செய்கின்றனர் . குடும்பத்தினரால் கைவிடப்பட்ட திருநங்கைகள் இந்த சமூகத்தாலும் புறக்கணிக்கப்படும் விளிம்பு நிலை தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.

சாதாரண மக்களுக்கே நகர்ப்புறங்களில் வாடகைக்கு வீடு கொடுக்க அவர்களது சாதி , மதம் , பணிபுரியும் இடம் உள்ளிட்டவற்றை விசாரிக்கும் சமூகத்தால் திருநங்கைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது . அவர்களது பாலினச் சிக்கலால் தனியார் நிறுவனங்களிலும் அவர்களை பணிக்குச் சேர்த்துக் கொள்வதில்லை . அதனால் , அவர்கள் பிழைப்புக்காக யாசகம் கேட்கும் பரிதாபத்துக்கு ஆளாகின்றனர் .

கொரோனா கரோனா ஊரடங்கால் நிறுவனங்கள் , கடைகள் 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்ததால் அவர்களின் வாழ்வாதாரம் முடங்கி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சிரமப்பட்டனர் .

இந்நிலையில் , மதுரை மதிச்சியத்தில் 12 திருநங்கைகள் சேர்ந்து அவர்கள் சேமிப்பில் இருந்து 2 கறவை மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்கின்றனர் . மதிச்சியம் பகுதியில் நிறைய கும்மி பாட்டுக் கலைஞர்கள் , கரகாட்டக் கலைஞர்கள் வசிக்கின்றனர் .

இவர்களுடன் சேர்ந்து திருநங்கைகளும் கும்மிப்பாட்டு பாடவும் , கரகாட்டம் ஆடவும் சென்று வந்தனர் . திருவிழா இல்லாத காலங்களில் யாசகம் பெற்று வந்தனர் . கொரோனா ஊரடங்கால் அனைத்தும் முடங்கியதால் இவர்கள் சிரமப்பட்ட நிலையில்தான் சுயதொழிலில் ஈடுபடும் யோசனை தோன்றி தற்போது கறவை மாடு வளர்த்து பால் விற்கும் தொழிலில் இறங்கியுள்ளனர் .

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது : தினமும் காலை , மாலையில் 12 லிட்டர் பால் கிடைக்கிறது செலவு போக ரூ.500 கிடைக்கிறது . இந்தத் தொழில் கவுரவமாக உள்ளது என தெரிவித்துள்ள அவர்கள், 12 பேருக்கு இந்த வருமானம் போதவில்லைதான் என்றாலும், கூடுதலாக 2 கறவை மாடு கிடைத்தால் நாங்கள் யாரிடமும் யாசகம் பெறாமல் கவுரவமாக பிழைத்துக் கொள்வோம் என்கின்றனர்.

குடும்பத்தாலும், சமூகத்தாலும் ஒடுக்கப்படும் திருநங்கைகள் சிலர், கடின உழைப்பால் பெரும் திருப்புமுனைகளாக மாறி வருகின்றனர். இவர்களை போன்ற திருநங்கைகளுக்கு நாமும் கைகொடுத்தால் உலகம் வியக்க சாதனைகளை படைப்பார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

Views: - 61

0

0