காவலர் சுப்பிரமணியனின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்: இறுதி சடங்கில் டிஜிபி திரிபாதி பங்கேற்பு…

19 August 2020, 10:40 pm
Quick Share

தூத்துக்குடி: நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனின் உடல் ஏரல் அருகே உள்ள பண்டாரவிளை கிராமத்தில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டை அடுத்த மணக்கரை வனப்பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி துரைமுத்து என்பவர் தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக, தனிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்று, அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது துரைமுத்து, தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை தூக்கி திடீரென்று போலீசார் மீது வீசினார். அந்த குண்டு வெடித்து போலீஸ்காரர் சுப்பிரமணியனின் (26) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நாட்டு வெடிகுண்டு வீசியதில் பலியான போலீஸ்காரர் சுப்பிரமணியனின் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனை செய்யப்பட்டது. கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதில் போலீஸ்காரர் தலை சிதறி பலியானதும், ரவுடியும் வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காவலர் சுப்பிரமணியனின் உடல் அவரது சொந்த ஊரான பண்டார விளைக்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு டிஜிபி திரிபாதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தென்மண்டல ஐஜி முருகன், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவ்,  தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் உள்ளிட்ட உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.  தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சண்முநகாதன் எம்எல்ஏ, காவலரின் உறவினர்கள், மற்றும் கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டு காவலரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் சுப்பிரமணியனின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண்டாரவிளை ஆகும். கடந்த 2017-ம் ஆண்டு இரண்டாம் நிலைகாவலராக பணியில் சேர்ந்த சுப்பிரமணியன், நாகர்கோவிலில் பயிற்சி பெற்றார். பின்னர் தூத்துக்குடி ஆயுதப்படையில் பணியாற்றினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணியன் பணியில் சேர்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மாவட்ட தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டு பணியாற்றி வந்தார்.

இறந்த சுப்பிரமணியனின் பெற்றோர் பெரியசாமி-பிச்சம்மாள். சுப்பிரமணியனுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவருக்கு புவனேசுவரி (25) என்ற மனைவியும், சிவஹரிஷ் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.  சுப்பிரமணியன் உடலைப் பார்த்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

Views: - 32

0

0