அரிசி ஆலையின் உரிமையாளர் மகன் கடத்தல்.. ரூ.3 கோடி கொடுத்து மீட்ட தந்தை : 6 பேரை கைது செய்த காவல்துறை!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2021, 6:41 pm
Kidnap Arrest -Updatenews360
Quick Share

திருப்பூர் : காங்கேயம் பகுதியில் ஆட்கடத்தல் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 6 வது நபரை திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் அரிசி ஆலை, திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.

இவரது மகன் 25 வயது பூர்த்தியாகும் சிவபிரதீப் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தந்தையின் அரிசி ஆலை நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இவர்களின் வீட்டிற்கு அருகிலேயே அரிசி ஆலையும் செயல்பட்டு வருகிறது.

இவர்கள்து சொந்த அலுவலகம் காங்கேயம் நகரப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை மதியம் அலுவலகம் சென்று சில பணிகளை முடித்துவிட்டு சிவபிரதீப் அவரது வாகனத்தில் வாகன ஓட்டுநருடன் வீடு திரும்பும் போது , 7 நபர்கள் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டுள்ளார்.

கடத்தல் சம்பவம் நடந்தது தெரியாமல் இருந்த தந்தையின் செல்லுக்கு போன் செய்த கடத்தல்காரர்கள் , உங்களது மகனை கடத்தியதாகவும் உயிருடன் மகன் வேண்டும் என்றால் 3 கோடி வேண்டும் என்றும் காவல்துறையிடம் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.
பயத்தின் காரணமாக காவல்துறையிடம் செல்லாமல் கடத்தல்காரர்கள் கேட்ட 3 கோடி பணத்தை நேற்று இரவே கொண்டு போய் கொடுத்து திண்டுக்கல் அருகே மகனை மீட்டு காங்கேயம் வந்துள்ளார். அதன் பிறகு காங்கேயம் காவல்துறையிடம் புகார் செய்துள்ளார் சிவபிரதீப்பின் தந்தை ஈஸ்வரமூர்த்தி.

விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் , மதுரையை சேர்ந்த அகஸ்டின் , ஆந்திராவை சேர்ந்த பாலாஜி , திண்டிவனத்தை சேர்ந்த சக்திவேல் , கிருஷ்ணகிரியை சேர்ந்த பஷீர் , சையத் ஆகிய 5 பேரை நேற்று திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது 6 வது நபராக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரையும் திருப்பூர் மாவட்ட தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 வது நபரிடமிருந்து 40 லட்சம் ருபாய் பறிமுதல் செய்யப்பட்டிருபதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

7 பேர் கொண்ட கடத்தல் கும்பலில் 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

Views: - 514

0

0