கோவையில் தொடங்கிய சிறப்பு முகாம் : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் பணி தீவிரம்!

21 November 2020, 12:26 pm
Vote Camp - Updatenews360
Quick Share

கோவை : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் வாக்குச்சாவடிகளில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16 ஆம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி வெளியிட்டார். வரைவு வாக்காளர் பட்டியல் படி கோவை மாவட்டத்தில் 14,68,222 ஆண் வாக்காளர்கள், 15,02,142 பெண் வாக்களர்கள், 3-ம் பாலினத்தவர் 369 என மொத்தம் 29 லட்சத்து 70 ஆயிரத்து 733 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் திருத்துதல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சிறப்பு முகாம் இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று காலை 10 மணிக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் திருத்துதல், முகவரி மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், 2021 ஜனவரி 1ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க ஆதார் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

தொடர்ந்து டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் பங்கேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு உள்பட திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் இணையதளம் மூலமோ அல்லது செயலி மூலமாகவோ பெயர் மாற்றம், நீக்கம், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர வாக்குப்பதிவு மையங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம், கோவை மாநகராட்சி உதவி ஆணையர் (மத்திய மண்டலம், கிழக்கு மண்டலம்), பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் டிசம்பர் 15ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் அளிக்கலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Views: - 0

0

0