இலங்கை தாதா மரணம்..! கோவைக்கு விசிட் அடித்த ரா உளவுத்துறை..! அங்கோடா லோக்கா வழக்கில் புதிய திருப்பம்..!

7 August 2020, 3:29 pm
Ankoda_Lokka_UpdateNews360
Quick Share

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை தாதா அங்கோடா லோக்காவின் மர்மமான மரணம் தொடர்பாக ஐந்து பேர் கொண்ட ரா உளவுத் துறையைச் சேர்ந்த குழு, சிபிசிஐடி மூத்த அதிகாரிகளை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி அண்மையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.

அங்கோடா லோக்கா, பிரதீப் சிங் என்ற பெயரில் போலி ஆதார் அட்டை பெற்றிருந்தார். ஜூலை 3’ம் தேதி கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை அடுத்து, இலங்கை காவல்துறையினர் இது தொடர்பாக மேலதிக தகவல்களை கோயம்புத்தூர் போலீசாரிடம் கேட்டனர்.

சிபிசிஐடி இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பது மற்றும் ஆதார் அட்டையைப் பெறுவதற்கான ஆவணங்களை மோசடி செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து விசாரிக்க ஏழு குழுக்களை அமைத்துள்ளது.

இதற்கிடையே ரா குழு, ஆகஸ்ட் 5’ம் தேதி கோயம்புத்தூருக்குச் சென்று சிபிசிஐடி காவல் ஆய்வாளர் கே.சங்கர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் வழக்கு குறித்து விவாதித்துள்ளது. இலங்கையில் கடும் குற்றங்களில் ஈடுபட்டதற்காக லோக்கா இலங்கை காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார். அவருக்கு இண்டர்போல் மூலம் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

லோக்கா தொடர்பான சில குறிப்பிடத்தக்க ஆவணங்களை ரா குழு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது உடல் மதுரையில் ஒரு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையில், லோக்காவின் அடையாளத்தை நிறுவும் பொருட்டு சிபிசிஐடி விஸ்ஸெராவை சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது.

டி சிவகாமி சுந்தரி மற்றும் அவரது திருப்பூர் நண்பர் எஸ்.தேனேஸ்வரன் மற்றும் இலங்கை பெண் அமானி தஞ்சி ஆகிய மூவரும் லோக்காவுக்கு ஆதார் அட்டை பெற ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் அமானி தஞ்சியின் கணவரை லோக்கா கொலை செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு அமானி லோக்காவுடன் தங்க ஆரம்பித்தார்.

லோக்கா 2017’ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து 2018 முதல் கோவையில் வசித்து வந்தார். அங்குள்ள ஜிம்களுக்கு புரோட்டின் பொருட்களை அவர் வழங்கியதாக கூறப்படுகிறது.

அவர் சிவகாமி சுந்தரி மற்றும் எஸ்.தேனேஸ்வரன் ஆகியோரின் உதவியுடன் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்திருந்தார். அங்கு இலங்கை பெண்ணான அமானி தஞ்சியுடன் வாழ்ந்துள்ளார்.

சிவகாமி சுந்தரி ஒரு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர். இதில் சுவாரஸ்யமான திருப்பமாக, சிவகாமி சுந்தாரிக்கு ஏழு கணக்குகளில் சுமார் 1 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் எல்.டி.டி.இ தொடர்பு உள்ளதா என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

உடலை தகனத்திற்காக மதுரைக்கு கொண்டு செல்ல சிவகாமி சுந்தரி மற்ற இரண்டு பேருக்கு உதவியதாக கூறப்படுகிறது. சுந்தரியின் தந்தை விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட ஏழு சிறப்புக் குழுக்களில் ஒன்று சிவகாமி சுந்தரியின் தந்தைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சாத்தியமான தொடர்புகளை ஆராய்ந்து வருவதாக சங்கர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதன் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்துவதற்காக பண பரிவர்த்தனைகள் ஆராயப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

Views: - 31

0

0