சிறுமியை எரித்து கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவும் : ஸ்டாலின் வலியுறுத்தல்!!

11 May 2020, 3:27 pm
Stalin 02 updatenews360
Quick Share

விழுப்புரத்தில் 10-ம் வகுப்பு சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- விழுப்புரம்‌, சிறுமதுரையைச்‌ சேர்ந்த பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின்‌ கை கால்களைக்‌ கட்டி, வாயில்‌ துணித்து அதே கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கிளைக்‌ கழகச்‌ செயலாளர்‌ கலியபெருமாள்‌- முன்னாள்‌ கவுன்சிலர்‌ முருகன்‌ இருவரும்‌ பெட்ரோல்‌ ஊற்றி எரித்துக்‌கொன்றிருக்கிறார்கள்‌.

95% தீக்காயத்துடன்‌ போராடிய சிறுமி ஜெயஸ்ரீ இறந்துவிட்டார்‌ என்ற செய்தி இதயமுள்ள எவரையும்‌ துடிதுடிக்கச்‌ செய்யும்‌.

கோவை வேளாண்‌ கல்லூரி மாணவியர்‌ மூவரை தருமபுரியில்‌ கருக்கி கொன்றவர்கள்‌ அ.தி.மு.க.,வினர்‌ சிலர்‌. அதற்கடுத்த கொடிய சம்பவம்‌ இது. சிறுமியை இழந்து வாடும்‌ குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌!

குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும்‌ தண்டனையே இனி ஜெயஸ்ரீ போன்ற சிறுமிகளையும்‌ பெண்களையும்‌ காப்பாற்றும்‌. ஏற்கனவே, பொள்ளாச்சி பாலியல்‌ குற்றத்தில்‌ சம்பந்தப்பட்டவர்கள்‌ சட்டத்தின்‌ பிடியிலிருந்து நழுவியுள்ள நிலையில்‌, விழுப்புரத்திலும்‌ அந்தநிலைமை ஏற்படக்கூடாது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன்‌ இத்தகைய கொடிய நிகழ்வுகள்‌, மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்‌ என்பதை உணர்ந்து காவல்‌ துறையினர்‌, ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச்‌ சாய்ந்துவிடாமல்‌, நடுநிலையோடு-சட்டத்தின்‌ முழு வலிமையையும்‌ பயன்படுத்தவேண்டும்‌. ஜெயஸ்ரீயின்‌ கொடூர மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க தி.மு.க துணை நிற்கும்‌!, எனக் குறிப்பிட்டுள்ளார்.