தலையில் பாலிதீன் கவர்… கடப்பாரையால் ஏடிஎம்மை உடைத்து சேதம்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!
Author: Babu Lakshmanan6 November 2021, 12:38 pm
கும்பகோணம் அருகே வேப்பத்தூரில் தலையில் பாலிதீன் கவரை மாட்டிக்கொண்டு ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே வேப்பத்தூர் அனைகுடி சாலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி இயங்கி வருகிறது. வங்கியைஒட்டி அதன் ஏடிஎம் மையம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை அந்த ஏடிஎம் மையத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்தபோது, ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் இன்று அதிகாலை 2.42 மணிக்கு ஏடிஎம் மையத்திற்குள் கடப்பாறையுடன் உள்ளே நுழையும் வாலிபர், அந்த கடப்பாரையால் ஏடிஎம் எந்திரத்தை உடைக்கும் காட்சி பதிவாகியிருந்தது.
மேலும், சிசிடிவி கேமராவில் முகம் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தலையில் பாலிதீன் கவரை மாட்டியபடி முகக்கவசம் அணிந்து சுமார் அரை மணி நேரமாக போராடியும், அந்த மர்மநபரால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த நபரின் கொள்ளை முயற்சி தோல்வி அடைந்தது.
இதனால் ஏடிஎம் எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ 6 லட்சம் பணம் தப்பியது. இதுகுறித்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து அந்த மர்மநபரின் கைரேகைகள் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0