ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் மற்றும் துணிகளை பறித்த 2 பேர் கைது

18 November 2020, 6:25 pm
Quick Share

சென்னை: புளியந்தோப்பு அருகே ஆட்டோவில் பயணம் செய்வது போல் ஏறி , கத்தியை காட்டி ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் மற்றும் துணிகளை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு கன்னிகா புரம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் வயது 36. இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி அசோக் பில்லர் அருகே சவாரிக்காக நின்று கொண்டிருந்த பொழுது இரண்டு பேர் இவரது ஆட்டோவில் பயணம் செல்வது போல ஏறினர். அப்பகுதியிலிருந்து  சிறிது தூரம் ஆட்டோ சென்றதும் ஆட்டோவில் இருந்த இரண்டு பேரில் ஒருவர் கத்தியை எடுத்து அலெக்ஸ்  கழுத்தில் வைத்து வண்டியை ஓரமாக நிற்க சொன்னார். அதன் பிறகு அவரிடம் இருந்த 1,500 ரூபாய் பணம் மற்றும் ஆட்டோவில் இருந்த புதிய துணிகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு அந்த  இரண்டு பேரும் தப்பி ஓடினர்.

இது குறித்து அலெக்ஸ் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் ஏற்கனவே சில வழக்குகளில் தொடர்புடையவர்கள் தான் இதில் ஈடுபட்டு இருப்பவர்கள்  என்பதை அறிந்து , ஆட்டோ டிரைவரிடம் சில பழைய குற்றவாளிகளின்  புகைப் படங்களை காட்டி விசாரித்தனர். அதன்படி வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த அஜய் ஆகிய இருவர் தான் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று இரவு வியாசர்பாடி கூட்ஷெட் பகுதியில் இருந்த இருவரையும் வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 16

0

0