சாத்தம்பாடியில் பொதுமக்கள் சாலை மறியல்…
9 August 2020, 4:28 pmஅரியலூர்; மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாத்தம்பாடியில் சாலையை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சாத்தாம்பாடி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலத் தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட தெருக்களில் இருந்து மழைநீர் வரத்து வாய்க்கால் வழியாக வடக்குத் தெருவில் உள்ள சிவன் கோயில் குளத்தில் வடிவது வழக்கம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு பெய்து வந்த கன மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் கைக்குழந்தையுடன் சிரமப்பட்டனர். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாத்தம்பாடி மெயின் ரோட்டில் அரியலூர் செல்லும் சாலையை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கும்போது சாத்தாம்பாடி கிராமத்தில் உள்ள வரத்து வாய்க்கால்களை தூர்வாரி மழை நீர் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.