3 மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி: 29ம் தேதி தொடங்குகிறது..!!
21 January 2021, 5:47 pmநெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி வருகிற 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றின் மூலம் ஏராளமான குளங்களுக்கு நீர்வரத்து உள்ளது. இந்த குளங்கள் குளிர்காலங்களில் பறவைகளின் புகலிடமாக விளங்குகிறது.
நெல்லை மாவட்டத்தில் கூந்தங்குளம், விஜய நாராயணம், நயினார்குளம், மானூர் பெரிய குளம், தென்காசி மாவட்டத்தில் வாகைகுளம், துப்பாக்குடி குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பாகுளம், பெருங்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் சீசன் காலங்களில் அதிகளவில் வருகை தரும். இந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 2011ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு தாமிரபரணி நீர் பறவைகள் கணக்கெடுக்கும் பணி 3 மாவட்டங்களிலும் வருகிற 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பணியினை அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம், நெல்லை இயற்கை சங்கம், முத்துநகர் இயற்கை சங்கம், மாவட்ட அறிவியல் மையம் இணைந்து நடத்துகிறது.
பறவைகள் கணக்கெடுப்பிலும் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 9994766473 என்ற எண்ணிற்கு அழைத்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வருகிற 29ம் தேதி நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளத்தில் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான கடைசி நாள் 26ம் தேதி ஆகும்.
கடந்த ஆண்டு 51 குளங்களில் நடந்த கணக்கெடுப்பில் 24 ஆயிரத்து 411 பறவைகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0
0